அஷ்ட கர்மங்கள் செய்ய ஏற்ற நேரம்
அஷ்ட கர்ம செயல்கள் என்னும் வசியம், ஆகர்ஷணம், மோகனம், வித்வேஷனம், தம்பனம், உச்சாடனம், பேதனம், மாரணம் ஆகிய செயல்களை செய்யும் போது அதற்க்கு உண்டான எந்திரங்களை எழுதி அதற்க்கு உரிய மூலிகைகளை வைத்து அதற்க்கு உரியவண்ணங்களில் நூல் இழைகளால் பிணைத்து கட்டி எந்த அஷ்ட கர்ம செயல்களை செய்கிறோமோ அதற்க்கு உண்டான எண்ணெயில் அதற்க்கு உரிய திரி போட்டு தீபம் ஏற்றி அஷ்ட கர்மத்தில் அந்த கர்மம் செய்வதற்கு உண்டான திசையை பார்த்து அமர்ந்து அதற்குரிய மந்திரங்களை ஜெபம் செய்தல் வேண்டும், இது மட்டும் போதுமா என்றால் போதாது அந்த அஷ்ட கர்ம காரியங்களை எந்த நாள் நட்சத்திரம் திதி லக்னம் கூடும் வேளையில் செய்தால் பலிதமாகும் என்பதனை அறிந்து செய்தால் மட்டுமே அஷ்ட கர்ம செயல்கள் சித்தியாகும், இதையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் மனம் போனபடி நினைத்த நேரத்தில் எல்லாம் செய்வதால் தான் பலருக்கும் அஷ்ட கர்மங்கள் சித்தியாவதில்லை. இதுவரை தனித்தனி கட்டுரைகளாக அஷ்ட கர்ம செயல்களுக்கு உண்டான உலோகம், மூலிகைகள், நூல் இழைகளின் எண்ணிக்கை, வர்ணம், எண்ணெய், திரி வகை, திசைகள் ஆகியவைகளை பற்றி சொல்லியிருக்கிறேன், இப்போது அஷ்ட கர்ம செயல்களை செய்வதற்கான காலங்களை ரோமரிஷி சித்தர் பாடல்களின் மூலம் விளக்க உள்ளேன். முன் சொன்ன எல்லாவற்றையும் மனதில் கொண்டு இங்கே குறிப்பிடும் காலத்தில் அஷ்ட கர்மங்களை செய்தால் நிச்சயம் பலிதமாகும்.
"கூறினேன் ஞாயிறுஅதில் அசுபதியும் சஷ்டி
குணமாக மிதுனமும் மோகனமேயாகும்
தேறினேன் பரணியும் ஏகாதசி
திரமான கடகமுமே ஸ்தம்பனமேயாகும்
வாரினதோர் கார்த்திகையும் துதிகைதானும்
வளமான சிங்கமது வேஷணமுமாகும்
நூறினே னுரோகணியும் சத்தமியும் கூட்டி
சுகமான கன்னியது பேதனமும் பாரே"
பாடல் விளக்கம் : ஞாயற்றுகிழமை நாளும் அசுவினி நட்சத்திரமும் சஷ்டி திதியும் மிதுன லக்கினமும் கூடும் வேளை அஷ்ட கர்மத்தில் மோகனம் செய்வதற்கு உரிய காலமாகும், ஞாயற்றுகிழமை நாளும் பரணி நட்சத்திரமும் ஏகாதசி திதியும் கடக லக்னமும் கூடும் வேளையில் ஸ்தம்பனமும், ஞாயற்றுகிழமை நாளும் கார்த்திகை நட்சத்திரமும் துதிகை திதியும் சிம்ம லக்னமும் கூடும் வேளை வித்வேஷணமும், ஞாயற்றுகிழமை ரோஹிணி நட்சத்திரமும் சப்தமி திதியும் கன்னி லக்னமும் கூடும் வேளையில் பேதனமும் செய்ய அஷ்ட கர்ம காரியங்கள் நிச்சயம் பலிதமாகும்.
"பாரடா சீரிடமும் துவாதசியோடு
பண்மையுள்ள துலாகோலும் உச்சாடனமே செய்யும்
கூறடா ஆதிரையும் திரிகையும் சேர்ந்தால்
குறியான விருச்சிகமும் மாரணமே செய்யும்
தீரடா புனர்பூசம் அஷ்டமியுங் கூடில்
செகம்புகழும் தனுசதுவும் வசியமாகும்
சாரடா பூசத்தொடு திரயோதசி மகரம்
சண்டாளா ஆகர்ஷணம் ஆகுந்தானே"
பாடல் விளக்கம் : ஞாயற்றுகிழமை நாளும் மிருகசீரிடம் நட்சத்திரமும் துவாதசி திதியும் துலாம் லக்னமும் கூடும் காலம் உச்சாடனமும், ஞாயற்றுகிழமை நாளும் திருவாதிரை நட்சத்திரமும் திரிகை திதியும் விருச்சிகம் லக்னமும் கூடும் காலம் மாரணமும், ஞாயற்றுகிழமை நாளும் புனர்பூசம் நட்சத்திரமும் அஷ்டமி திதியும் தனுசு லக்னமும் கூடும் காலம் வசியமும், ஞாயற்றுகிழமை நாளும் பூசம் நட்சத்திரமும் திரயோதசி திதியும் மகரம் லக்னமும் கூடும் காலம் ஆகர்ஷணம் செய்ய உடனே பலிதமாகும்.
இவ்வாறு ஒவ்வொரு கிழமைகளிலும் அஷ்ட கர்ம காரியங்களான வசியம், ஆகர்ஷணம், மோகனம், வித்வேஷனம், தம்பனம், உச்சாடனம், பேதனம், மாரணம் ஆகிய செயல்களை செய்ய உரிய நட்சத்திரம், திதி, லக்னம் இவற்றை சொல்லிச் சென்றுள்ளனர் அந்த காலங்களை அறிந்து செய்தால் மட்டுமே அஷ்ட கர்ம காரியங்களான வசியம், ஆகர்ஷணம், மோகனம், வித்வேஷனம், தம்பனம், உச்சாடனம், பேதனம், மாரணம் ஆகிய செயல்கள் ஜெயமடையும், மற்றபடி மனம் போன போக்கில் செய்யும் யாருக்கும் வெற்றிகள் தராது.